தேசிய மருத்துவ ஆணையம்: சர்க்கரை நோய்க்கான முதுநிலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டும்


தேசிய மருத்துவ ஆணையம்: சர்க்கரை நோய்க்கான முதுநிலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2021 6:49 PM GMT (Updated: 12 Dec 2021 6:49 PM GMT)

தேசிய மருத்துவ ஆணையம்: சர்க்கரை நோய்க்கான முதுநிலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டும் மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்.

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 10.4 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் தொற்றா நோய்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வருகின்றன. தொற்றா நோய்களில் பிரதானமாக உள்ள சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த அதற்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்துதல் அவசியம்.

எனவே, முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பான எம்.டி. படிப்பில் சர்க்கரை நோய்க்கான பிரிவை பிரத்யேகமாக தொடங்க வேண்டும். நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில்தான் சர்க்கரை நோய்க்கான முதுநிலை மருத்துவ பட்டயப்படிப்பு (டிப்ளமோ) தொடங்கப்பட்டது. சென்னை மருத்துவ கல்லூரியில் கடந்த 1986-ம் ஆண்டிலேயே சர்க்கரை நோய்க்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில், பட்டயப்படிப்பாக உள்ள அதனை முதுநிலை பட்டப்படிப்பாக (எம்.டி) மாற்ற மத்திய அரசும், தேசிய மருத்துவ ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story