எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு கவர்னர் மரியாதை


எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு கவர்னர் மரியாதை
x
தினத்தந்தி 13 Dec 2021 8:23 PM GMT (Updated: 13 Dec 2021 8:23 PM GMT)

எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எட்டயபுரம்,

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். கவர்னருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் வந்தார். விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி, லட்சுமி ரவி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது சொந்த ஊரான எட்டயபுரத்திற்கு காரில் சென்றனர்.

பாரதியார் சிலைக்கு மரியாதை

அங்குள்ள பாரதியார் மணிமண்டபம் முன்பு கவர்னர் ஆர்.என்.ரவி, லட்சுமி ரவி ஆகியோருக்கு பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகள் பாரதியார் பாடல்களை பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த பாடல்களை கேட்ட கவர்னர், ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்று கூறி அந்த குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் முழு உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, லட்சுமி ரவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள புகைப்படங்களையும் பார்வையிட்டனர். முன்னதாக பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்தியில் கையெழுத்து

மேலும் மணிமண்டபத்தில் உள்ள வருகை பதிவேட்டில் பாரதியார் குறித்து ஆங்கிலத்தில் தனது கருத்துகளை கவர்னர் ஆர்.என்.ரவி பதிவு செய்தார். பின்னர் அவர் தனது கையெழுத்தை இந்தியில் எழுதிவிட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Next Story