வீட்டுமனை நிலத்தில் உருவான திடீர் பள்ளம் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர்


வீட்டுமனை நிலத்தில் உருவான திடீர் பள்ளம் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர்
x

வீட்டுமனை நிலத்தில் திடீரென பள்ளம் உருவானது. அதில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எல்லமடையில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், அந்த ஆலையில் வேலை செய்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைகளை வழங்கியது.

வீட்டுமனைகளை பெற்ற தொழிலாளர்கள் கட்டிடம் கட்டாமல் நிலத்தை அப்படியே போட்டு வைத்திருந்தனர். செடிகள் கொடிகள் அங்கு முளைத்துவிட்டதால், இடத்தின் உரிமையாளர் கடந்த 2 நாட்களாக அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

10 அடி ஆழ குழி

அப்போது ஒரு வீட்டுமனையில் திடீரென 10 அடி ஆழத்துக்கு பள்ளம் உருவானது. உடனே சுத்தம் செய்தவர்கள் உள்ளே எட்டிப்பார்த்தார்கள். அதில் ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு குழி தெரிந்தது.

இதற்கிடையே பள்ளம் உருவான இடத்தில் புதையல் இருப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்கள்.

புதையல் இல்லை

இந்த பகுதியை சேர மன்னர்களும் மற்றும் பாரி மன்னரும் ஆண்டுள்ளார்கள். அதனால் குழிக்குள் புதையல் இருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில் உறுதியாக நம்பப்பட்டது. இதையடுத்து போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குழி ஏற்பட்ட இடத்தை தோண்டினார்கள். ஆனால் புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் இந்த பகுதியில் கட்டிடம் கட்டும்போது, கவனமாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மனையின் உரிமையாளர்களிடம் கூறிவிட்டு சென்றார்கள்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, திடீர் பள்ளம் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு நடத்தி உண்மையை விளக்க வேண்டும் என்றார்கள்.

Next Story