வரும் ஜனவரி 3ந்தேதி முதல் 6-12ம் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும்; அரசு அறிவிப்பு
வரும் ஜனவரி 3ந்தேதி முதல் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.820, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நாள் 01.12.2021ன்படி, 15.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
பண்டிகைக காலங்களில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தலைமையில் 13.12.2021 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் முடிவில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story