கால்நடை துறையில் 1,450 மருத்துவர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை


கால்நடை துறையில் 1,450 மருத்துவர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2021 5:59 AM IST (Updated: 14 Dec 2021 5:59 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை துறையில் காலியாக உள்ள 1,450 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


சென்னை,


செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில், புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். இதில், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

இதன்பின்னர், வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி முகாமை துவக்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறும்போது, கால்நடை பராமரிப்பு துறையில் தமிழகம் முழுவதும் 1,450 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கால்நடை மருத்துவர்கள் தொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வர உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் கால்நடை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story