சிபிஎஸ்இ வினாத்தாள்: தவறு இழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
அதாவது, குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை நிலவுவதற்கும், சமூகப் பிரச்சினைகளுக்கும் பெண் விடுதலைதான் காரணம் என்பது போன்ற வாக்கியங்கள் அந்த வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததாகவும், அதற்கு விடைகளாக “எழுத்தாளர் ஓர் ஆண் பேரினவாத நபர்” மற்றும் “எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார்” என இரண்டு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு மாணவ- மாணவியர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கேள்வி பெண் விடுதலையை அவமதிப்பதோடு, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களை, பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. பாரதி கண்ட கனவை நசுக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பெண்ணுக்கு எதிரான இத்தகையக் கருத்துக்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், படிக்கின்ற மாணவ- மாணவிகளிடையேயும் ஒரு விதமான குழப்பத்தையும், பேதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அந்த வினாவிற்கான முழு மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்து இருக்கிறது. இது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல் உள்ளது.
தேர்வுக்கான வினாத் தாள்களை தயார் செய்வதற்கு முன்பு, சமுதாயத்திற்கு எதிரான கருத்துக்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையை வினாத்தாள் தயாரிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையும், அதற்கேற்ப வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு உண்டு.
எனவே, இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி, தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story