பாலியல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


பாலியல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Dec 2021 11:11 PM IST (Updated: 14 Dec 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் பெண் பணியாளர் ஒருவர், சக ஆண் ஊழியர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவில், பாலின பாகுபாடு கொண்ட நபர்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த பெண் பணியாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், பாலியல் புகார் அளித்து ஏழரை ஆண்டுகள் கழித்தும் முடிவு எட்டப்படவில்லை என்றும், இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணால் எப்படி திறமையாக பணியாற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெண்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டியது, பணி வழங்குவோரின் கடமை என அறிவுறுத்திய நீதிபதி, பெண் பணியாளரின் பாலியல் புகார் குறித்து 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். 

Next Story