வேலூரில் பிரபல நகைக்கடையில் பல கோடி தங்க - வைர நகைகள் கொள்ளை


வேலூரில் பிரபல நகைக்கடையில் பல கோடி தங்க - வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 15 Dec 2021 1:18 PM IST (Updated: 15 Dec 2021 1:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பிரபல நகைக்கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு பல கோடி தங்க - வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

வேலூர்

வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நேற்று இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் பூட்டிச் சென்றனர். இன்று காலையில் ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது நகை பெட்டிகள் திறந்து கிடந்தன.

இதன் மூலம் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் தங்க வைர நகைகள் கொள்ளை போயிருந்ததன. கடையின் மேல் தளத்தில் உள்ள சுவரில் துளை போடப்பட்டு இருந்தது. மேலும் மேல்தளத்தில் இருந்து தரைதளத்திற்கு நடுவே உள்ள சிமெண்ட் தளத்தை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். நகைக் கடையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர். மோப்ப நாய் ஷிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 

நகை கடை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர். மேலும் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். கொள்ளை நடந்த நகைக்கடை இருக்கும் காட்பாடி சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன அவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடையில் இருந்த தங்க நகைகளை விட வைர நகைகள் அதிகம் கொள்ளை போயுள்ளது.

பல கோடி தங்க வைர நகைகள் கொள்ளை போயுள்ளது. அதுபற்றி கணக்கீடு செய்து வருகின்றனர். தற்போது நடந்த கொலை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story