சாலை பாதுகாப்புகளை உருவாக்க இளம் என்ஜினீயர்களுக்கு பயிற்சி அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்


சாலை பாதுகாப்புகளை உருவாக்க இளம் என்ஜினீயர்களுக்கு பயிற்சி அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Dec 2021 10:13 PM GMT (Updated: 15 Dec 2021 10:13 PM GMT)

விபத்து இல்லாத தமிழ்நாடு என்ற மு.க.ஸ்டாலினின் கனவை நிறைவேற்றும் வகையில் சாலை பாதுகாப்புகளை உருவாக்க இளம் என்ஜினீயர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்பை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

சென்னை,

நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்களுக்கு சாலை பாதுகாப்பு என்ஜினீயரிங் சிறப்பு பயிற்சி முகாம் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் பா.கணேசன் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் என்ஜினீயர் கோதண்டராமன் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

விபத்துகளை தவிர்க்க சாலையை செப்பனிட்டு, பாதுகாப்பாக வைப்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்க தமிழகத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த இளம் என்ஜினீயர்கள் (உதவி என்ஜினீயர்கள், கூடுதல் என்ஜினீயர்கள்) 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 40 பேர் கொண்ட 10 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 நாட்களுக்கு தலா ஒரு குழு வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் அ.வீரராகவன் இளம் என்ஜினீயர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சியை அளிக்கிறார்.

உன்னத நிலைக்கு...

இளம் என்ஜினீயர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

இந்திய சாலை என்ஜினீயர் கல்வி நிறுவனம் தொடங்கியது போன்று தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் சங்கம் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளிலேயே, அதிக விபத்துகள் நடைபெறுவதில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளதே இதற்கு காரணம். இந்த நிலையை மாற்றி சாலை விபத்து இல்லாத மாநிலம் என்ற உன்னத நிலைக்கு தமிழகத்தை உயர்த்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே இளம் என்ஜினீயர்கள் பயிற்சி பெற்று, விபத்துகளை தடுப்பதற்கு சாலை பணிகளை முறைப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு தணிக்கை

நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் இதனை செய்ய முடியும். 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 45 ஆயிரத்து 489 விபத்துகள் நடந்தன. அதில் 8 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகள் அறவே இல்லாமல் செய்திட பல முனைகளில் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் என்ஜினீயரிங் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இந்த பயிற்சியின் நோக்கம்.

இந்த பயிற்சியில் சாலை சந்திப்புகளை பாதுகாப்பாக வடிவமைப்பது, போக்குவரத்தினை மேலாண்மை செய்வது, போக்குவரத்து வேகத்தினை குறைப்பது, சாலை பாதுகாப்பு தணிக்கை செய்வது, விபத்து பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்துவது, எச்சரிக்கை கருவிகளை ஆங்காங்கே நிறுவுவது, நடை பயணிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. 500 மீட்டருக்குள் குறிப்பிட்ட காலத்துக்குள் தொடர்ந்து 5 விபத்துகள் நடந்தால் அந்த இடங்களை ‘கருப்பு இடங்கள்' என்று மத்திய-மாநில அரசுகள் வகைப்படுத்தும். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களை கண்டறிந்து முதலில் அதில் இருக்கும் குறைகள் தீர்க்கப்படும்.

விபத்து இல்லா தமிழகம்

விபத்து நடந்த பின் ஒருவரை காப்பாற்றுவது டாக்டரின் பணி. விபத்தே நடக்காமல் பாதையை செப்பனிடுவது என்ஜினீயரின் பணி. அதேபோன்று ‘கருப்பு புள்ளி' என்ற குறியீடு வருவதற்கு முன்பு அந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விபத்தை தடுக்கவேண்டும். சாலை பாதுகாப்புக்கு வேண்டிய ‘சிக்னல்'கள் தரமான பொருட்களால் பொருத்தப்பட வேண்டும். என்ஜினீயர்கள் ஒரு இலக்கை அமைத்து கொண்டு சாலை பாதுகாப்பு பயிற்சியை பெறவேண்டும்.

விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்கவேண்டும் என்பது முதல்-அமைச்சரின் கனவு. அந்த கனவை நிறைவேற்ற இளம் என்ஜினீயர்கள் கைகோர்க்கவேண்டும். அனைவரும் இணைந்து இழுத்தால்தான் தேர் ஓடும். எனவே இந்த பயிற்சி திட்டம் நிறைவேற அனைவரும் கை கோர்த்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் தேசிய நெடுஞ்சாலை தலைமை என்ஜினீயர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Next Story