பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு தமிழக அரசு உத்தரவு


பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2021 1:23 AM IST (Updated: 17 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 6.9.2021 அன்று முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு விவாதத்தின்போது அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டார்.

பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, தவறுகளை முழுமையாக ஆய்வு செய்து போலியாக பதிவு செய்யப்பட்ட இனங்கள் மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய இனங்களை கண்டறிந்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என்று அவர் அறிவித்தார்.

இரண்டு அடுக்குகள்

அதன்படி இரு அடுக்குகளாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க அரசு முடிவு செய்தது. முதல் அடுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு ஒரு தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும்.

தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இருப்பார். சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் ஒருவர், குழுவின் முதல் உறுப்பினராக நியமிக்கப்படுவார். இந்த நியமனம் பகுதிநேர நியமனமாகும்.

பதிவுத்துறையின் 4 கூடுதல் பதிவுத்துறை தலைவர்களில் ஒருவர், இந்த குழுவின் 2-ம் உறுப்பினராக நியமிக்கப்படுவார்.

சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுவார்கள்.

2-ம் அடுக்கு

சிறப்பு புலனாய்வுக் குழுவின் 2-ம் அடுக்கு, நிர்வாக அலகாக இருக்கும். சிறப்பு புலனாய்வுக் குழுவின் செயல்பாடுகள் தங்குதடையின்றி நடக்கவும், அன்றாட நிர்வாக மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளை சிறப்பாக நிறைவேற்றவும், குழுவின் பணிகளை ஒருங்கிணைக்கவும், உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு உடனிருந்து உதவும் வகையில் நிர்வாக அலகு செயல்படும்.

ஒருங்கிணைப்பாளராக செயல்படும் கூடுதல் பதிவுத்துறை தலைவர், இந்த நிர்வாக அலகில் தலைவராக இருப்பார்.

இந்தக் குழுவிற்கு தனி அலுவலகம் புதிய முகவரியில் அமைக்கப்படும். 2-ம் அடுக்கு நிர்வாக அலகிற்கு தேவையான துணை பணியிடங்கள் (மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர், உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்) மறுபரவல் மூலம் நிரப்பப்படும்.

குழுவின் பொறுப்புகள், பணிகள்

கடந்த காலங்களில் பதிவுத்துறையில் பதிவு நடைமுறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து புலனாய்வு செய்யப்பட வேண்டும். ஆள் மாறாட்டம், நில மோசடி மூலம் போலி ஆவணப்பதிவு பற்றி புலனாய்வு செய்ய வேண்டும்.

வெளிநாடுகள் மற்றும் பிறமாநிலங்களில் வசிக்கும் அசையா சொத்தின் உண்மையான உரிமையாளர்களை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்கள்;

இறந்தவர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை அவர்களே நேரில் வந்து எழுதிக் கொடுப்பதாக ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்த இனங்கள்; அசல் ஆவணங்கள் தொலைந்து போனதாக போலியாக காவல்துறையிடம் இருந்து சான்றிதழ் பெற்று, பிறரின் சொத்தை அபகரித்த இனங்கள்;

நில அபகரிப்பு

போலியான, காலாவதியான, ரத்து செய்யப்பட்ட பொதுஅதிகார ஆவணங்கள் மூலம் தவறான வகையில் உரிமை மாற்றம் மூலம் நில அபகரிப்பு செய்த இனங்கள்: போலி பட்டா தயாரித்து அதனடிப்படையில் பிறரது சொத்துகளை அபகரித்த இனங்கள்; ஒரே சொத்தை ஒன்றிற்கு மேற்பட்டோரிடம் விற்று ஏமாற்றிய இனங்கள் உள்ளிட்ட பல்வேறு மோசடி ஆவணப் பதிவுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விரிவாக புலனாய்வு மேற்கொள்ளும்.

ஆவணப் பதிவில் சார்பதிவாளரின் பங்கு; வேண்டுமென்றே ஒரே பதிவு அலுவலரால் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட ஆவணப் பதிவுகள் தொடர்பான விவரங்களையும், அந்தத் தவறுகள் மீது எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும்.

சார் பதிவாளர்களின் பங்கு

அரசு நிலங்கள், நீர்நிலை புறம்போக்குகள், பூமிதான இடங்கள், சுவாதீன சொத்துகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் நடத்தப்பட்ட முறைகேடான ஆவணப் பதிவுகள் குறித்து புலனாய்வு மேற்கொள்ளும்.

இந்த முறைகேடுகளில் சார் பதிவாளர்களின் பங்கு,, அந்த தவறுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை குழு பரிந்துரைக்கும்.

கடந்த காலங்களில் பதிவு அலுவலர்களால் அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட வருவாய் இழப்புகள் குறித்து முழுமையான புலனாய்வு மேற்கொண்டு, வருவாய் இழப்புகளை வசூலிக்க வேண்டிய வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைக்கும்.

பதிவு அலுவலர்கள் செய்த தவறுகளை விரிவாக புலனாய்வு செய்து அதனால் அரசுக்கு ஏற்பட வருவாய் இழப்புகள் கண்டறியப்படும்.

3 ஆண்டுகள் இயங்கும்

இந்த சிறப்பு புலனாய்வுக் குழு 3 ஆண்டுகளுக்கு செயல்படும். பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து போலி ஆவணப் பதிவு மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக புகார் மனுக்களை குழு பெற்று புலனாய்வு மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story