கோவை பள்ளி மாணவி கொலை வழக்கு: குடும்ப நண்பர் கைது


கோவை பள்ளி மாணவி கொலை வழக்கு: குடும்ப நண்பர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2021 11:13 AM IST (Updated: 17 Dec 2021 1:28 PM IST)
t-max-icont-min-icon

நகைக்காக அவரது உறவினரே பள்ளி மாணவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

கோவையை அடுத்த சரவணம்பட்டி சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் மாருதி நகரில் உள்ள முள்புதரில் பொதுமக்கள் குப்பை கொட்டுவது வழக்கம். நேற்று முன்தினம் காலை சிலர் குப்பை கொட்ட சென்றபோது துர்நாற்றம் வீசியது. உடனே அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு, கம்பளியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் பிணம் கிடப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், சாக்குமூட்டையை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் அந்த சிறுமி யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.மேலும் அந்த பகுதியில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக வந்த புகார்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் கலைவாணி என்பவர் தனது மகள் கார்த்திகாவை (வயது 15) கடந்த 11-ந் தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்தது தெரிய வந்தது. 

கலைவாணி தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவருடைய 2-வது மகள் கார்த்திகா சரவணம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 11-ந் தேதி முதல் காணாமல் போய் உள்ளார் என்பது தெரியவந்தது

இதைத்தொடர்ந்து கலைவாணியை போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர் வந்து பிணமாக கிடந்த சிறுமியின் உடலை பார்த்து கண்கலங்கினார். இறந்து கிடப்பது தனது மகள் கார்த்திகா தான் என்று அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார். 

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து  வந்தனர்.

இந்த நிலையில் மாணவியின்  கொலை வழக்கில் போலீசார் இன்று ஒருவரை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் கலைவாணியின் குடும்ப நண்பர் முத்துக்குமார்  என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குடும்ப நண்பரான  முத்துக்குமார் , நகைக்காக மாணவியை வீட்டிற்கு வரவழைத்து உள்ளார். அங்கு மாணவிக்கும் முத்துக்குமாருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துக்குமார்  மாணவியை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் கம்பளியால் சுற்றி குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.நகைக்காக அவரது உறவினரே பள்ளி மாணவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story