தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:37 PM IST (Updated: 17 Dec 2021 1:37 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டம் முதலில் 9-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு 11-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு 17-ந்தேதிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தி.மு.க. அரசை கண்டித்து ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதேபோல் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதிலும் அந்த மாவட்டத்தில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சென்னையில் 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அளவில் உள்ளதால் 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே 5 மாவட்டச் செயலாளர்களான பாலகங்கா, ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

சென்னை அடையார் டெலிபோன் எக்ச்சேஞ்ச் அருகில் தென்சென்னை தெற்கு, கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தென்சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பங்கேற்றார்.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். 

திருவள்ளூர் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story