ஜல்லிக்கட்டு விழா... நாட்டு மாடுகள் மட்டும் களம் காண செய்துள்ள ஏற்பாடுகள் என்னென்ன?


ஜல்லிக்கட்டு விழா... நாட்டு மாடுகள் மட்டும் களம் காண செய்துள்ள ஏற்பாடுகள் என்னென்ன?
x
தினத்தந்தி 17 Dec 2021 2:05 PM IST (Updated: 17 Dec 2021 2:05 PM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்களில் களம் காணும் நாட்டு மாடுகளுக்கு தீவிர பயிற்சிகளை தொடங்கிவிட்டனர்.

இன்னும் சில வாரங்களில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அரங்கேற உள்ளது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர் இந்த ஆண்டு உற்சாகத்துடன் உள்ளனர். அதற்கு காரணம், நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது தான்.

தமிழகத்தில் பாரம்பரியமாக புளிக்குளம், காங்கேயம் இன காளைகள் தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வந்தன. பின்னர் கலப்பின மாடுகளும் களத்தில் இறக்கப்பட்டன. நாட்டு மாடுகளின் திமில் பெரிதாக இருக்கும்.

எண்ணிக்கையை உயர்த்த ஆலோசனை


இருந்தாலும், கலப்பின மாடுகளின் வரவினால் நாட்டு மாடுகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் ஐகோர்ட்டு இந்த தடாலடி உத்தரவை பிறப்பித்தது. மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு ஐகோர்ட்டு ஆலோசனை அளித்துள்ளது.

அதன்படி அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் வருகிற தைப்பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு (குறிப்பாக நாட்டு மாடுகளுக்கு) தீவிர பயிற்சிகளை தொடங்கிவிட்டனர்.

சான்றிதழ் கட்டாயம்

இதுகுறித்து வலையங்குளம் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் அருண்சங்கர் கூறியதாவது:- அடுத்த மாதம் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட உள்ளது.

தற்போது மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஊசி போடப்பட்டதற்கான அடையாள எண், அதன் உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்ட மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும்.

அதேபோல இன்னும் சில வாரங்களில் நாட்டு மாடுகளை இனம் கண்டு அதனை உறுதி செய்வதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவிடுவார். இதற்காக டாக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி செயல்படும். அந்த கமிட்டி நாட்டு மாடுகளை அடையாளம் கண்டு உறுதிப்படுத்திய பின்பு, காளைகளுக்கான உடல் தகுதி நடத்தப்படும்.

அதில் காளையின் எடை, காயங்கள் உள்ளதா, ஊக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளதா? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து தகுதிச்சான்று அளிக்கப்படும். தகுதிச்சான்று பெற்ற நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வத்திராயிருப்பு மலை மாடுகள்



நாட்டு இன காளைகளில் புளிக்குளம், காங்கேயம் மாடுகள் தான் பிரபலமானவை. ஆனால் இந்த இனங்களை விட மூர்க்கத்தனமானவை வத்திராயிருப்பு மலை மாடுகள் என்று கூறுகிறார்கள். வத்திராயிருப்பு, கான்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரங்களில் கூட்டம், கூட்டமாக இவை வளர்க்கப்படுகின்றன.

அதாவது, ஒரு காலத்தில் மலைகளில் வாழும் காட்டு மாடுகளில் இருந்து கன்றுக்குட்டிகளை பிரித்து கொண்டு வந்து வளர்த்தவை தான், தற்போது பல ஆயிரம் மாடுகளாக (கிடை மாடுகள்) பெருகியிருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த வத்திராயிருப்பு மலை மாடுகளில் இருந்து வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வகை காளைகள் தங்களின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அடங்குபவை. இதனால் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு இவற்றை அழைத்துச்செல்லும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தேவைப்படுவார்கள். அவர்களை இந்த மாடுகள் தாக்காமல் இருக்க அவற்றின் கண்களை மூடியபடிதான் வாகனங்களில் ஏற்றி உரிய இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறுகிறார்கள்.

கண்கள், கொம்பு என இவற்றின் உடல் அமைப்பானது பிற நாட்டு மாடுகளில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றன. காட்டு விலங்களுக்கு உரிய குணாதிசயங்களில் சில வத்திராயிருப்பு மலை மாடுகளுக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

துடிப்புடைய மலை மாடுகள்



இதுகுறித்து வத்திராயிருப்பு சுரேஷ்குமார் என்பவர் கூறுகையில், வத்திராயிருப்பு மலை மாடுகளைச்சேர்ந்த ஜல்லிக்கட்டுக்காளைகள் நூற்றுக்கணக்கில்தான் உள்ளன. ஆனால் இவை களத்தில் நின்று விளையாடி, வீரர்களை பந்தாடுபவை. இயற்கையாகவே இவை துடிப்புடன் காணப்படுபவை. எளிதில் இந்த காளைகளை அடக்கி விட முடியாது. எங்கள் பகுதியில் இருந்து இந்த வகை கன்றுக்குட்டிகளை வாங்கிச்சென்று காளைகளாக வளர்க்கின்றனர். அவை பிறந்த இடத்தின் பெயர் சொல்லும்படி பாராட்டுகளை பெற்றுள்ளன, என்று தெரிவித்தார்.

ஏற்பாடுகளை செய்வோம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில், நடக்க உள்ள ஜல்லிக்கட்டு விழாவில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்காக கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று, அதன்பின் தேவையான நடவடிக்கைகளை செய்ய உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் உத்தரவுகளின்பேரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றனர்.

தீவிர பயிற்சி...

மதுரையை அடுத்த வெள்ளையம்பட்டி நாகராஜ் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வருகிறோம். நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க உள்ளதால், நடக்க உள்ள ஜல்லிக்கட்டு விழா மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற நம்புகிறோம். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும். நாங்கள் சில நாட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். அவற்றிற்கு இப்போதிலிருந்தே தீவிர பயிற்சியை அளித்து வருகிறோம் என்றார்.

Next Story