தி.மு.க. அரசை கண்டித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 8:29 PM GMT (Updated: 17 Dec 2021 8:29 PM GMT)

தி.மு.க. அரசை கண்டித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் விரோத ஆட்சி

தேர்தலின்போது ஓட்டு வாங்குவதற்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை பொய்யாக அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துவிட்டது. பொய் தான் அவர்களுக்கு மூலதனம். இதை வைத்து தான் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் விரோத ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

557 கொலைகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதுவரை 557 கொலைகள் நடந்துள்ளன. இங்கு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. சாலையில் ஓட, ஓட விரட்டி கொலை செய்கிறார்கள். வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்களிடமும் நகைகளை பறிக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அதாவது, போலீஸ் அதிகாரிகளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை. போலீசார் வெளியில் செல்லும்போது பாதுகாப்புக்கு துப்பாக்கிகளை எடுத்து செல்லுமாறு டி.ஜி.பி. கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் பயப்படுவார்கள். தற்போது சில போலீஸ் அதிகாரிகளே குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது திறமை இல்லாத நிர்வாகத்தை காட்டுகிறது.

2 ஆண்டில் ஆட்சி முடியும்

அ.தி.மு.க.வை நேரடியாக எதிர்க்க முடியாமல் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனை என்றால் 69 அல்லது 70 இடங்களில் தான் நடக்கிறது.

அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். இதுபோன்ற மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். 2024-ம் ஆண்டு ஒரேநாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். அப்படி வந்தால் 2 ஆண்டுகளில் உங்களது ஆட்சி முடிந்துவிடும். எனவே தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்துபோவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேட்டில் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தேனி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும், கொரோனா வைரஸ் பரவும் வகையில் முக கவசம் அணியாமல் கூட்டம் கூட்டியதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story