தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் சாலை மறியல்; சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் சாலை மறியல்; சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 8:22 AM IST (Updated: 18 Dec 2021 8:22 AM IST)
t-max-icont-min-icon

தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. அவர்களின் நிலை என்று தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை என்ன ஆனது என்று தெரியாத காரணத்தால் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

பெண்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை-பெங்களூரு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story