ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினருக்கு தொந்தரவு கூடாது; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினரை தொந்தரவு செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது.
சென்னை,
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அளித்த பதிலில், அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகன்கள் மற்றும் ஓட்டுனரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுவாமிநாதன், விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினருக்கு தொந்தரவு செய்ய கூடாது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமென்றாலும் தேடி கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் முறைப்படி சம்மன் அனுப்புங்கள். அதன்பின்பு குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story