பணியாளர்கள் தேர்வில் உள்ளூர் மக்கள் புறக்கணிப்பு: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முன்பு போராட்டம்
கூடங்குளம் அணு உலையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தேர்வில் உள்ளுர் மக்களுக்கு பணி வழங்காததை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
பணகுடி,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் 3, 4-வது அணு உலையில் தற்காலிக என்ஜினீயர் பதவிக்கு சமீபத்தில் எழுத்து தேர்வு நடந்தது. இதில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பி.இ. பட்டதாரிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இதில் சமீபத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வேலை வழங்கப்படவில்லை. வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இது கூடங்குளம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களிடமும் புகார் கூறி இருந்தனர்.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தேர்வில் உள்ளுர் மக்களுக்கு பணி வழங்காததை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணிக்கு செல்ல முடியாமல் அந்த பகுதியில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து இன்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடை பெற்று வரும் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தற்போது அணுமின் நிலையத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story