‘தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்’ கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி


‘தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்’ கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 21 Dec 2021 2:40 AM IST (Updated: 21 Dec 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

‘‘தமிழகத்தில் 5 மாதங்களில் 5 ஆண்டு சாதனையை செய்திருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியே காட்டுவோம்’’ என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னை,

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து சமய தலைவர்களும் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றார். தொடர்ந்து கிறிஸ்துமஸ் ‘கேக்' வெட்டப்பட்டது.

பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

5 மாதங்களில் 5 ஆண்டு சாதனை

தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தபோது சிறுபான்மை நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு எல்லா வகையிலான ஏற்றமும் வழங்கக்கூடிய காலமாக தி.மு.க.வின் காலம் தொடங்கியுள்ளது.

அன்பும், இரக்கமும், கருணையும் கொண்ட அரசைதான் தி.மு.க. நடத்திக்கொண்டு இருக்கிறது. 2003-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தை அ.தி.மு.க. அரசு முடக்கியது. 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதை மீண்டும் செயல்பட வைத்தோம். அந்த சாதனை சரித்திரம்தான் இப்போது மீண்டும் நடந்து வருகிறது. பல்வேறு திட்டமிடுதல்களில் சிறுபான்மை நல ஆணையமும் ஈடுபட தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவுகளை சரிசெய்யக்கூடிய முயற்சிகளை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். 5 ஆண்டுகள் செய்யவேண்டிய சாதனைகளை நாங்கள் 5 மாதங்களில் செய்திருக்கிறோம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டுவோம்

அரசியல் எல்லைகளை கடந்து பொதுவானவர்களாக இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் தந்தோம். அதில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்திருக்கிறோம். நிதிச்சுமை இருந்தாலும் மக்களுக்கு செய்யவேண்டிய நன்மைகளை, திட்டங்களை நிறுத்தாமல் செய்து வருகிறோம்.

நாங்கள் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி என்னையும் சரி, உங்களையும் சரி ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் நிறைவேற்றி காட்டுவோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்பு கலந்த உரிமையில்...

முன்னதாக ‘கேக்' வெட்டும்போது இனிகோ இருதயராஜ் மு.க.ஸ்டாலினுக்கு கேக் தந்தார். அப்போது, ‘என்ன கையில் தருகிறீர்கள். ஊட்டி விடுங்கள்’ என்று மு.க.ஸ்டாலின் அன்பு கலந்த உரிமையில் கேட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு இனிகோ இருதயராஜ் கேக் ஊட்டினார்.

விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், செஞ்சி கே.மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார், தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் ஏ.தர்மராஜ் ரசாலம், பொதுச்செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ், மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் கே.எம்.இல்யாஸ் ரியாஜி,

சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, அடைக்கல அன்னை சபையின் தலைமை சகோதரி மரிய பிலோமினா, தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை துணை தலைவர் அ.நீதிநாதன், பெந்தகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற துணை பிரதம பேராயர் டேவிட் பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story