பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்


பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:46 AM IST (Updated: 22 Dec 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. - தி.மு.க.வினர் மோதிக் கொண்டனர்.

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடிகுளம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டது. வறண்டு கிடந்த இந்த குளத்திற்கு பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி தண்ணீர் கடந்த நவம்பர் மாதம் முதல் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக நேற்று முன்தினம் இரவு கோதவாடி குளம் நிரம்பி தண்ணீர் மறுகால்விழுந்து சென்றது. இதனால் நேற்று காலை குளம் அருகே உள்ள அம்மன் கோவிலுக்கு பொதுமக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொள்ளாச்சி ஜெயராமன்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், குளத்தை பார்வையிடவும் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து குளம் அருகில் அ.தி.மு.கவினர் திரண்டனர். இதையறிந்து தி.மு.க.வினரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குவந்த தி.மு.க.வினர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தது நாங்கள்தான். ஆகவே இந்த பொங்கல் விழாவில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ கலந்து கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த போலீசார், வருவாய் துறையினர் தி.முக., அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் கட்சியினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பொங்கல் வைத்து இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் கோதவாடி குளத்திற்கு வந்து குளம் நிரம்பிய பகுதியில் மலர் தூவி விட்டு கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடித்துவிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் அங்கிருந்து புறப்பட்டார்.

தள்ளுமுள்ளு

அப்போது அ.தி.மு.க -தி.மு.க தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீசார் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க கட்சியினர் உதவியுடன் பாதுகாப்புடன் மீட்டு அழைத்து வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வை நோக்கி ஒரு செருப்பு வீசப்பட்டது. இந்த செருப்பு அவர் மீது படாமல் அருகில் இருந்த மற்றொருவர் மீது பட்டு கீழே விழுந்தது. இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story