தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை' திட்டம் - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில்கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழக அரசு இந்த தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாக பணிகளைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.
தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உள்பட) மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவானர் அரங்கத்தில்” இன்று வைக்கப்பட உள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story