இணையதளத்தில் விவரம் வெளியீடு: 551 கோவில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி அமைச்சர் தகவல்


இணையதளத்தில் விவரம் வெளியீடு: 551 கோவில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2021 3:26 AM IST (Updated: 24 Dec 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 551-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதுடன், பக்தர்கள் பார்வையிடும் வகையில் கோவில்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக நன்கொடையாளர்கள் இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நன்கொடை வழங்கும் திட்டம், வாடகைதாரர்கள் கணினி வழியாக வாடகை செலுத்தும் திட்டம், கமிஷனரின் சுற்றறிக்கை, நிர்வாக வரவு செலவு திட்டம், கோவில்களின் திருப்பணிகள் மற்றும் துறையின் அனைத்து செயல்பாடுகளை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கும் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோவில்களில் அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கங்காதீசுவரர் கோவில்

தொடர்ந்து, கோவில் திருப்பணி மேற்கொள்ள 2 வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கோவில்களான சென்னை வடபழனி முருகன் கோவில், புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம் தண்டாயுதபாணி சாமி கோவில், மதுரை மாவட்டம் கூடலழகர் கோவில், காஞ்சீபுரம் குன்னவாக்கம் வேணுகோபால சாமி கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் காளகஸ்தீசுவரர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காசி விஸ்வநாதர் கோவில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றாயப் பெருமாள் கோவில், கோவை மாவட்டம் கோட்டை கங்கமேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வீர நரசிம்மப்பெருமாள் கோவில்.நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், ரத்தின கீரீசுவரசாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் கோபுராபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம் லால்குடி லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உட்பட 551 கோவில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிவுற்றவுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இணையதளத்தில் வெளியீடு

பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

Next Story