தமிழகம் முழுவதும் மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகம் முழுவதும் மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Dec 2021 3:34 AM IST (Updated: 24 Dec 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்பா, மசாஜ் சென்டர்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுர்வேதம் சிகிச்சை மையம் நடத்தி வருபவர் கிரிஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தங்களது சிகிச்சை மையத்தின் சட்டப்படியான செயல்களில் தலையிடும் வகையில் போலீசார் செயல்படுகின்றனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் சோதனை என்ற பெயரிலும், புகார்கள் வருகிறது என்று கூறியும் அன்றாட செயல்பாடுகளில் போலீசார் அடிக்கடி தலையிடுகின்றனர்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஏற்க முடியாது

ஸ்பா, மசாஜ் சென்டர் ஆகியவற்றுக்கு எதிராக புகார்கள் வரும்போது மட்டுமே ஆய்வு செய்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆயுர்வேத சிகிச்சை, மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். அதை தடுக்க முடியாது.

போலீசாரின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும்.

எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.

நடவடிக்கை

எனவே, சென்னையில் இருப்பது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதுபோன்ற இடங்களில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை டி.ஜி.பி. வழங்க வேண்டும்.

அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளை பின்பற்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story