விவசாய மின் இணைப்புக்கு கூடுதல் சலுகை - மின் வாரியம் அறிவிப்பு


விவசாய மின் இணைப்புக்கு கூடுதல் சலுகை - மின் வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2021 2:49 PM IST (Updated: 24 Dec 2021 2:49 PM IST)
t-max-icont-min-icon

விவசயிகளுக்கான மின் இணைப்புக்கு கூடுதல் சலுகைகளை தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடப்பாண்டு மார்ச் நிலவரப்படி, விவசாய மின் இணைப்பு கேட்டு 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் துவக்கி வைத்தார்.

அத்திட்டத்தின் கீழ் சாதாரண பிரிவில் 40 ஆயிரம், சுயநிதி பிரிவில் 60 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரண பிரிவில் 2007 வரையும், சுயநிதி பிரிவில் 2013 வரையும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில் தமிழக மின் வாரியம், 'சாதாரணம்' மற்றும் 'சுயநிதி' போன்ற பிரிவுகளில் விவசாய மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட கட்டணம் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்.

இதற்காக, விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என்ற மூன்று வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைவிட வழித்தட செலவு அதிகம் உள்ளது. இதனால், சுயநிதி பிரிவில் ‘தட்கல்’ என்ற விரைவு மின் இணைப்பு திட்டமும் உள்ளது. அதற்கு, 'மோட்டார் பம்ப்' குதிரை திறனுக்கு ஏற்ப 2.50 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில் தட்கல் திட்டத்தில் சீனியாரிட்டி இல்லாமல், யார் வேண்டுமானாலும் முழு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பித்த நபர் மரணம், சொத்து தகராறு உள்ளிட்ட காரணங்களால் சிலர் வராமல் உள்ளனர். 

இதையடுத்து கூடுதல் சலுகை வழங்கும் வகையில், தற்போது சாதாரண பிரிவில் 2007-க்கு பதில் 2013 வரையும், சுயநிதி பிரிவில் 2013-க்கு பதில் 2018 வரையும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குமாறு பொறியாளர்களுக்கு தமிழக மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Next Story