மு.க.ஸ்டாலின், கட்சி தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து


மு.க.ஸ்டாலின், கட்சி தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Dec 2021 7:04 PM GMT (Updated: 24 Dec 2021 7:04 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

‘‘உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு’’ என ஈகையையும், ‘‘ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு’’ என சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும், எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள் என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள கிறித்துவ மக்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ மக்களின் நலனையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் தி.மு.க.வும், தி.மு.க. அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நின்றிருக்கிறது. அதேவழியில் தொடர்ந்து பயணித்துச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும்.

மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்படும் இந்த விழாவை கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-

அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் பிறந்த நன்னாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

கிறிஸ்துமஸ் திருநாள்கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசுபிரான் விரும்பியதை போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரம் நீங்கவேண்டும். உலகம் வளம்பெறவேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

நாட்டு மக்களிடையே அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை தந்த இயேசு கிறிஸ்துவின் வழியில் பயணிக்கிற கிறிஸ்தவ பெருமக்கள், அனைத்து மக்களோடும் இரண்டற கலந்து மதநல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள். மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர-சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ

இதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்ட்டின், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் உள்பட பலர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்துவும் டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

Next Story