பா.ஜ.க.வின் பெரும்பான்மை வாதத்தை காங்கிரசால் தோற்கடிக்க முடியுமா? பீட்டர் அல்போன்ஸ் பதில்


பா.ஜ.க.வின் பெரும்பான்மை வாதத்தை காங்கிரசால் தோற்கடிக்க முடியுமா? பீட்டர் அல்போன்ஸ் பதில்
x
தினத்தந்தி 25 Dec 2021 10:23 PM IST (Updated: 25 Dec 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஹலோ எப்.எம்.மில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதில், தற்போதைய தி.மு.க. ஆட்சி மற்றும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறித்தும் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி மிக மோசமான காலம் என்றும் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே மிக மோசமான முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க. மீது தி.மு.க. தற்போது மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதாகவும், அவர்களுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பரவி வரும் செய்திகள் குறித்து பேசுகையில், பேரிடர் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உடனடியாக உதவுவது போல் தமிழகத்துக்கு மத்திய அரசு செய்வதில்லை என்றும் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டிய சூழலில்தான் மாநில அரசு இருப்பதாகவும் அதை முதல்வர் ஸ்டாலின் சரியாக கையாண்டு வருவதாக கூறியுள்ளார். அதேவேளையில் எனக்கு தெரிந்த வரையில் கொள்கை ரீதியாக பாரதீய ஜனதாவை எதிர்க்கும் ஒரே தலைவர் இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும் தான் என்றும் காங்கிரஸ் கூட அவர் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு நடந்தால் வரும் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் பாரதீய ஜனதாவுக்கு மாற்றாக காங்கிரஸ் மட்டுமே இருப்பதாகவும், பா.ஜ.க.வின் பெரும்பான்மை வாதத்தை தோற்கடிக்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியானது சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும் என்றும் மூத்த தலைவர்களையும், மற்ற மாநில கட்சிகளையும் அவர்கள் அழைத்து பேசி அரவணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் எதிரக்கட்சிகளின் செயல்பாடு, தேர்தல் சீர்திருத்த சட்டம் உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார்.


Next Story