வேலூர் சிறையிலிருந்து 30 நாள் பரோலில் வெளியே வந்த நளினி


வேலூர் சிறையிலிருந்து 30 நாள் பரோலில் வெளியே வந்த நளினி
x
தினத்தந்தி 27 Dec 2021 9:02 PM GMT (Updated: 27 Dec 2021 9:02 PM GMT)

30 நாள் பரோலில் நளினி வெளியே வந்தார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய தாயார் பத்மாவதி தனக்கு இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லை என்றும் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டுமெனவும் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு 30 நாள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பரோலில் வந்தார்

அதன்படி நளினிக்கு நேற்று காலை பரோல் உத்தரவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து காலை 10 மணிக்கு அவர் வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வேனில் நளினியை காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள வேல் என்பவருடைய வீட்டிற்கு 10.45 மணிக்கு அழைத்து வந்தனர்.

உள்ளே சென்றதும் அவர், அங்கிருந்த தனது தாயார் பத்மாவதியை பார்த்து அம்மா என்று கதறினார். அப்போது தாயாரும் கண்கலங்கினார்.

வீட்டிற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் போடப்பட்டது. நளினியை பார்த்து சால்வை வழங்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.

5-வது முறையாக பரோலில் வந்த நளினி

நளினி தற்போது 5-வது முறையாக பரோலில் வந்துள்ளார். இவர் முதல் முறையாக தன்னுடைய தம்பி பாக்கியநாதன் திருமணத்திற்காக சென்னைக்கு பரோலில் சென்றார்.

அதன் பிறகு இரண்டாவது முறையாக தன்னுடைய தந்தை மறைவிற்கும், மூன்றாவது முறையாக தந்தை இறந்ததையொட்டி நடந்த காரியத்திற்கும் சென்றார். நான்காவது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் சத்துவாச்சாரியில் சிங்கராயர் என்பவருடைய வீட்டில் தங்கி தனது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக பரோலில் வந்தார். தற்போது உடல்நிலை சரியில்லாத தனது தாய் பத்மாவதியை பார்த்துக் கொள்வதற்காக 5-வது முறையாக காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள வேலு என்பவருடைய வீட்டிற்கு பரோலில் வந்துள்ளார்.

பரோலில் வெளியே வந்துள்ள நளினி தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story