சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் வழங்கவில்லை - தமிழக அரசு விளக்கம்


சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் வழங்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
x

எந்த சத்துணவு மையத்திலும் தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பள்ளி சத்துணவு மையங்களுக்கு சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. முட்டை வினியோகஸ்தர்கள் மூலம் பள்ளி சத்துணவு மையங்களுக்கு வாரம் ஒரு முறை முட்டைகள் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு முட்டைகள் வினியோகம் செய்யப்படும்போது, முட்டைகளின் தரம், அளவு மற்றும் எடையை நன்கு பரிசோதித்து, நல்ல நிலையில் உள்ள முட்டைகளையே மைய பொறுப்பாளர்கள் பெறுகின்றனர்.

பெறப்படும் சமயத்திலோ அல்லது ஒரு வார காலத்திற்குள்ளாகவோ பெறப்பட்ட முட்டைகளில் ஓட்டையோ, விரிசலோ அல்லது புழுக்களோ இருந்தது கண்டறியப்பட்டால், அந்த முட்டைகள் மற்றும் அந்த முட்டை இருந்த அட்டை தனியாக வைக்கப்படுகிறது. ஏனெனில், முட்டை வினியோகஸ்தர்களிடம் இருந்து உடைந்த அல்லது புழுக்கள் உள்ள முட்டைகளுக்கு மாற்றாக புதிய முட்டைகள் பெறுவதற்காக அவை தனியாக எடுத்து வைக்கப்படுகின்றன. வாரம் ஒரு முறை முட்டைகள் பெறப்பட்டாலும் தினமும் முட்டைகள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக எடுக்கும்போதும், அவை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. அதன்பின்னரே முட்டைகள் வேக வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

தரமற்ற முட்டைகள் வழங்கவில்லை

ஒவ்வொரு முறையும், உடைந்த அல்லது புழுக்கள் இருந்த முட்டைகள், முட்டை வினியோகஸ்தர்களிடம் இருந்து மாற்றி பெறுவதற்காக தனியாக வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன. முட்டைகளை, முட்டை வினியோகஸ்தர்களிடம் இருந்து பெறும்போது, அதன் தரத்தினை உறுதி செய்தல், சேதமான முட்டைகளுக்கு மாற்றாக புதிய முட்டைகள் பெறுதல், சத்துணவு சமைக்கப்படும்போதும், முட்டைகளை வேக வைக்கும்போதும், பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுரைகளாக அவ்வப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை உள்பட உணவு தரமான முறையில் வழங்கப்படுவது பல நிலைகளிலும் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுகிறது. எந்த ஒரு சத்துணவு மையத்திலும், கெட்டுப்போன அல்லது புழுக்களுடன் உள்ள முட்டைகள் அல்லது தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story