கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட கோவில் பராமரிப்பு செலவுக்காக மானியதொகை உயர்வு


கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட கோவில் பராமரிப்பு செலவுக்காக மானியதொகை உயர்வு
x
தினத்தந்தி 28 Dec 2021 5:20 AM IST (Updated: 28 Dec 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட கோவில்களின் பராமரிப்பு செலவுக்காக உயர்த்தப்பட்ட மானியத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தை சார்ந்த செங்கோட்டை வட்டம் உள்ளிட்ட பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி கீழ் 490 கோவில்களின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. இந்த கோவில்களுக்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு மானியமான ரூ.3 கோடி கோவில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தினை ரூ.3 கோடியில் இருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி 22.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 225 கோவில்கள் உள்ளன. தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு அரசு மானியத்தினை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி 12.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மேற்கண்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக உயர்த்தப்பட்ட மானியத்திற்கான காசோலையை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதற்கான நிகழ்வு தலைமை செயலகத்தில் நடந்தது. ரூ.6 கோடிக்கான மானியத்திற்கான காசோலையை சுசீந்திரம் - கன்னியாகுமரி தேவஸ்தான கோவில்கள் இணை ஆணையர்-செயல் அலுவலர் ஞானசேகரிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.3 கோடிக்கான காசோலையை, புதுக்கோட்டை கோவில் சமஸ்தானத்தின் இணை ஆணையர் க.தென்னரசு மற்றும் செயல் அலுவலர் கோ.சரவணனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story