சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள்


சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள்
x
தினத்தந்தி 29 Dec 2021 1:17 AM IST (Updated: 29 Dec 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் ‘கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் மற்றும் தையல்காரரிடம் யோகாசன பாய்களை பறித்த போலீஸ் ஏட்டு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோவை,

கோவையை அடுத்த துடியலூர் ஆனைக்கட்டி செல்லும் வழியில் உள்ள மாங்கரை சோதனைச்சாவடியில் கோவை - கேரளா இடையே செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். சம்பவத்தன்று அந்த வழியாக தையல்காரர் அய்யப்பன் என்பவர் யோகாசன பாய்களை எடுத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் யோகாசன பாய்களுக்கான ரசீது உள்ளதா? என்று கேட்டு உள்ளனர். ஆனால் அவரிடம் ரசீது இல்லாததால் யோகாசன பாய்களை கொண்டுசெல்ல முடியாது என்று கூறி அவற்றை போலீசார் பறித்தனர்.

கூகுள்பே மூலம் லஞ்சம்

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கு பணியில் இருந்த தடாகம் போலீஸ் நிலைய ஏட்டு முத்துசாமி என்பவர் அய்யப்பனிடம் யோகாசன பாய்களை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து மாங்கரை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த தடாகம் போலீஸ்காரர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

உடனடியாக இடமாற்றம்

இதைத்தொடர்ந்து யோகாசன பாய்களை பறித்த ஏட்டு முத்துசாமி கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தடாகம் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Next Story