அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வின் அடிப்படையில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இது குறித்து அமைச்சர் பேசுகையில், 21.63 லட்ச நகைக்கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்களால் 40 கிராமிற்கு மேல் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன.இதன் மூலம், 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன.22 லட்சத்து 52 ஆயிரத்து 226 கடன்தாரர்களில் தற்போது 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேரின் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
“அரசு ஊழியர்களுக்கும், வங்கி பணியாளர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி இல்லை.
அரசு ஊழியர்கள் அல்லாத ஒப்பந்த பணியாளர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி உண்டு.
ஒரே நபர், ஒரே ஆதார் அட்டையில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு வங்கிகளில் நகையை அடகு வைத்துள்ளனர். இந்த கடன்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது. நகை கடன் தள்ளுபடி நிபந்தனை பற்றி அ.தி.மு.க. பேசக் கூடாது.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story