கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறப்பு
கனமழை எதிரொலியாக பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர் மழை பெய்துவருவதால், மின் வினியோகம் தடைபட்டுள்ளது. மாநகர் முழுவதும் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை முதல் கொட்டித் தீர்த்த மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் பாதுகாப்பு கருதி இரவு 9.30 மணிக்கு மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இரவு 9.30 மணி நிலவரப்படி நீர்மட்டம் 34. 86 அடியாக பதிவாகியுள்ளது. 3.101டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக 320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story