தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி அனைவரது நகைக்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி அனைவரது நகைக்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2021 2:10 AM IST (Updated: 31 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

‘தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி விண்ணப்பித்த அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’, என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலின்போது, ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்று என்ன நிலைமை? நகைக்கடன் வாங்கியோரில் கிட்டத்தட்ட 75 சதவீதம் கடனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்து இருக்கிறது.

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகைக்கடன் பெற தகுதி இல்லாதவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால், வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள்.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் 16 லட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பகுப்பாய்வுக்கு பின் அதுவும் 2.5 லட்சம் குறைந்துவிட்டது. அதாவது, தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நகைக்கடன், நிதிநிலை அறிக்கையில் ரூ.6 ஆயிரம் கோடி என குறைக்கப்பட்டு, தற்போது அது கிட்டத்தட்ட ரூ.4 ஆயிரத்து 500 கோடி என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. இதை சரியாக கணக்கிடும்போது இதற்கான தொகை இன்னும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நகைக்கடன் தள்ளுபடிக்கான தி.மு.க. அரசின் இந்த அறிவிப்பு 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது.

பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர். பகுப்பாய்வு குறித்து ஏன் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை? பகுப்பாய்வு குறித்து ஏன் பிரசாரம் செய்யவில்லை? நகைக்கடனை வாங்க தூண்டும் வகையில் ஏன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது? என்ற கேள்விகள் தற்போது மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.

இதுபோன்ற பகுப்பாய்வை மக்கள் மேற்கொண்டால் பகுப்பாய்வு செய்யும் உரிமையை தி.மு.க. இழக்கும். அதற்கான காலத்தை மக்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்து கொள்வதோடு, விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்து அவர்களை சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story