பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல் - திருத்தணியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பலி
பெரம்பலூர் அருகே லாரியின் மீது கார் மோதிய விபத்தில் திருத்தணியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கே.கே.நகரை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜேஷ் (37). இவர் கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர் அரக்கோணத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் காவிய சாதனா (10). இதனிடையே, ராஜேஷ் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக குடும்பத்தினருடன் தனது மனைவியின் ஊரான செங்கோட்டைக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று இரவு மூவரும் காரில் திருத்தணிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
ராஜேஷ் காரை ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார், சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மகேஸ்வரி, மகள் காவியா சாதனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உயிரிழந்த ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பெரம்பலூர் போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெள்ளைச்சாமி (60) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story