தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீர் திருப்பம் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது


தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீர் திருப்பம் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது
x
தினத்தந்தி 1 Feb 2022 5:40 AM IST (Updated: 1 Feb 2022 5:40 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி முறிந்தது. தனித்து போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது.

தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

கூட்டணி பேச்சுவார்த்தை

ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் இடபங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. மாவட்ட வாரியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை தனது வேட்பாளர் பட்டியலை தி.மு.க. வெளியிட்டது.

அதுபோல அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பா.ஜனதா தனித்து போட்டி

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. போட்டியிடும் இடங்கள் குறித்து 2 கட்டமாக அ.தி.மு.க. தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. நேற்று முன்தினம் இரவு தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதனால் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுவரை இருந்து வந்த அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி முறிந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீர் திருப்பமாக பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. நேற்று மேலும் பல மாநகராட்சி, நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதற்கிடையே சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநில பொதுச்செயலாளர்கள் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் டால்பின் ஸ்ரீதர், சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

வீடுதோறும் தாமரை

இதனை தொடர்ந்து மாநில தலைவர் கே.அண்ணாமலை, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு நலன் கருதி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. பாராளுமன்றத்திலும், வெளியிலும் முழு ஆதரவு அளித்து உள்ளது. அதேபோல் கடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ.க.வும் தீவிரமாக உழைத்தது. இந்தநிலையில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வேகமாக வளர்ந்து வரும் பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தொண்டர்களின் ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காகவும், வீடுகள் தோறும் தாமரையை கொண்டு செல்லும் இலக்கை அடைவதற்காகவும் அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அ.தி.மு.க. தலைமையிடம் இடபங்கீடு குறித்து நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து உள்ளது. இதற்கு டெல்லியில் உள்ள தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். இதனை கஷ்டமான முடிவு என்று சொல்லமாட்டோம், அ.தி.மு.க.வுடன் எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்தாலும், இனிவரும் காலங்களில் நாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்து உள்ளோம். குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தோழமை தொடரும். வரவிருக்கும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. இணைந்தே தேர்தலை சந்திக்கும்.

பொய்யான வாக்குறுதி

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. எனவே வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடுமையாக உழைத்து, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நிலையை மக்களுக்கு பெற்று தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 8 மாதத்தில் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்களை வீடுதோறும் கொண்டு சேர்ப்பதுடன், பொய்யான வாக்குறுதி அளித்ததையும் எடுத்து கூறுவோம்.

பா.ஜ.க.வின் நிலை என்ன என்று தெரியும். எதற்கு ஆசைப்பட வேண்டும் என்றும் தெரியும். தனித்து போட்டி என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். பா.ஜ.க.வுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் நான் நேசிக்கக்கூடிய தலைவர்கள். தி.மு.க. தான் எங்களுடைய பொதுவான எதிரி கட்சி. தேசநலனில் அக்கறை கொண்ட கட்சிகளில் அ.தி.மு.க.வும் ஒன்று. மரியாதை உள்ள கட்சி. அவர்களுக்கான தேர்தல் வரும்போது கூடவே நிற்போம். பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட்டணி தர்மத்தை மதித்து நீதிஷ்குமார் முதல்-மந்திரியாக அனுமதி அளித்தது.

பெண்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கும், எதிர்பார்ப்பு இல்லாமல் கட்சி பணி செய்பவர்களுக்கும், ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மறைமுக தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து பின்னர் அறிவிப்போம்.

உள்ளாட்சி அமைப்புகளில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமரின் புகைப்படம் இருக்கும் நிலையில், தமிழகத்திலும் பிரதமரின் புகைப்படம் வைக்கும் காலம் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. நிர்வாகி

அ.தி.மு.க.வை சேர்ந்த மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி என்பவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார். அவருக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

உடன் கட்சி நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநில பொதுச்செயலாளர்கள் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Next Story