தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்


தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 2 Feb 2022 5:42 AM IST (Updated: 2 Feb 2022 5:42 AM IST)
t-max-icont-min-icon

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் நேரடி வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வந்தனர்.

சென்னை,

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கின்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளே நடத்தப்படும் என்று கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

அந்த வகையில் அனைத்து வகை பள்ளிகளிலும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வமுடன் நேரடி வகுப்புகளுக்கு வந்தனர். அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவுவாயில் பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பது போல, உடல் வெப்பநிலை பரிசோதித்தும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகும் வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில பள்ளிகளில் இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி உற்சாகமாகவும் மாணவர்களை வரவேற்றனர்.

வழிகாட்டு நெறிமுறைகள்

மேலும் மாணவ-மாணவிகளின் குடும்பத்தில் யாருக்கும் காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறி இருக்கிறதா? கொரோனா பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்து உள்ளே அனுப்பினர். அதேபோல், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவரும் முககவசம் அணிந்தபடி இருந்தனர். வகுப்பறைகளில் குறிப்பிட்ட சில இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் அமர வைத்து ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடங்களை நடத்தினர்.

உணவு இடைவேளை நேரங்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரங்களில் மொத்தமாக மாணவ-மாணவிகள் கூட்டம் கூடாதபடி, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதுதவிர கூட்டமாக அமர்ந்து மதிய உணவு உண்பதை தவிர்க்க வேண்டும், குடிநீர் பாட்டில்களை அனைவரும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் தொட்டு பேசவேண்டாம், அவ்வப்போது சானிடைசர், சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்கள் அவ்வப்போது மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.

கட்டணம் செலுத்தக்கூறிய தனியார் பள்ளிகள்

ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் திறக்கப்பட்ட போது, புத்துணர்ச்சிக்கான வகுப்புகள் நடத்தப்பட்டுவிட்டதால், இந்த முறை நேரடி வகுப்புகளில் பாடம் சார்ந்த வகுப்புகளே நடத்தப்பட்டன. குறிப்பாக பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முடிக்கப்பட வேண்டிய பாடங்கள் மற்றும் திருப்புதல் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துவதற்கான பணிகளையே ஆசிரியர்கள் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.

சில தனியார் பள்ளிகள், பள்ளி திறந்த முதல் நாளிலேயே கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை உடனடியாக செலுத்த சொல்லி அறிவுறுத்தியதாகவும், இதனால் உடனே மாணவ-மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் வங்கிகளுக்கு சென்று கல்வி கட்டணத்துக்கான பணத்தை செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்துவதில் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அரசு கூறி வரும் நிலையில், தனியார் பள்ளிகளின் இந்த செயல் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே சற்று முகம் சுழிக்கத்தான் வைத்தது.

Next Story