பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்


பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 2 Feb 2022 6:05 AM IST (Updated: 2 Feb 2022 6:05 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக கூறி தேர்தலை புறக்கணிக்க போவதாக கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் 14-வது வார்டு உறுப்பினர் பதவியை அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விட்டதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்காடு அம்மன் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்‌.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அதே பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கலெக்டர் இல்லாததால் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அந்த பகுதியில் தள்ளி வைக்க வேண்டும். வார்டு மறுவரையறை செய்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மீறி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்தனர்.

Next Story