வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 3 Feb 2022 1:20 AM IST (Updated: 3 Feb 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரத்தில் உள்ள சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு மண்டல இணை இயக்குனராக ஆறுமுகநயினார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள புவியியல், சுரங்கத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

ஆறுமுகநயினாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகும். இவர் கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்.

விழுப்புரத்தில் ஆவணங்கள் சிக்கின

இந்தநிலையில் விழுப்புரம் கிருஷ்ணா நகரில் ஆறுமுகநயினார் வசித்து வரும் வாடகை வீட்டில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஆறுமுகநயினார் வெளியே எங்கும் செல்வதற்கு முன்பாக காலை 6 மணிக்கெல்லாம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை தொடங்கினர். வீட்டின் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அவர்கள் சோதனை நடத்தினர். வீட்டின் ஒரு அறையை விடாமல் அனைத்து அறைகளிலும் தீவிரமாக சோதனை செய்தனர். 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அதிரடி சோதனை மாலை 3.30 மணிக்கு முடிந்தது.

இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போல் நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது.

Next Story