7 ஆண்டுக்கு முன் திருடுபோன கோவில் படிச்சட்டத்தின் வெள்ளி பட்டயங்கங்கள் - 2 பூசாரிகள் கைது
மயிலாடுதுறை ரங்கநாதர் கோவிலில் வெள்ளி பட்டயங்களை திருடிய வழக்கில் தீட்சிதர், பட்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள கடவுள் சிலையை தூக்கி செல்ல பயன்படுத்தப்படும் படிச்சட்டத்தின் வெள்ளி பட்டயங்கள் 2014-ம் ஆண்டு திருடுபோனது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது.
அதில், கடவுள் சிலையை தூக்கி செல்ல பயன்படுத்தப்படும் மரத்தால் ஆன படிச்சட்டத்தில் பொறுத்தப்பட்டிருந்த வெள்ளி தகடுகளை திருடி விற்பனை செய்த அதே கோவிலில் பூஜை செய்துவரும் குருக்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவிலில் தீட்சிதராக வேலை செய்து வந்த முரளி என்பவரும் பட்டராக வேலை செய்து வந்த ஶ்ரீனிவாச ரங்கன் என்பவரும் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவத்தில், தனியார் நகைக்கடையில் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பட்டயங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்று இந்த வெள்ளி பட்டயங்களை பறிமுதல் செய்து இதை யார் விற்பனை செய்தது? எப்போது விற்பனை செய்தார்கள்? இவை என்னென்ன வடிவங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டார்கள்? என்பது குறித்து நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அதே கோவிலில் பூசாரிகளாக பணியாற்றிய முரளி மற்றும் ஸ்ரீனிவாச ரங்கன் ஆகிய இருவரும் வெள்ளி பட்டயங்களை திருடி அதை நகைக்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தீர்டிதராக வேலை செய்து வந்த முரளி மற்றும் பட்டராக வேலை செய்து வந்த ஸ்ரீனிவாச ரங்கன் என்பவரையும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த திருட்டு வழக்கில் கோவிலில் வேலை செய்து வரும் மேலும் சில பூசாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story