நெல்லைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்தி - சபாநாயகர், அமைச்சர்கள் வரவேற்பு
தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தி நெல்லை மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தது.
நெல்லை,
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அலங்கார ஊர்தியில் ஆங்கிலேயேர்களை எதிர்த்து போராடிய தமிழக வீரர்களான மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை நிராகரித்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி அனுப்பப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வகையில் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தி நெல்லை மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தது. இதனை நெல்லை மாவட்ட எல்லையான உத்தம்பாண்டியன்குளம் பகுதியில் தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மலர் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Related Tags :
Next Story