அனைத்து மது பார்களையும் மூட உத்தரவு: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு


அனைத்து மது பார்களையும் மூட உத்தரவு: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
x

அனைத்து மது பார்களையும் மூட உத்தரவு: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 719 பார்களை உடனடியாக மூட வேண்டும். மீதமுள்ள பார்களை அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருக்கிறது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமது எண்ணம் என்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது சிறந்த வாய்ப்பாகும். முதலில் அனைத்து பார்களையும் மூடிவிட்டு அடுத்தடுத்த கட்டங்களில் மதுக்கடைகளை மூடலாம். மாறாக, ஐகோர்ட்டு ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது, குடித்து விட்டு போதையில் பொது இடங்களில் நடமாடுவோருக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மதுவிலக்கு சட்டப்பிரிவுகளை திருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி 3 ஆயிரத்து 719 பார்களை உடனடியாக மூடப்பட வேண்டும். மீதமுள்ள பார்கள் எத்தனை? அவை அடுத்த 6 மாதங்களில் எப்போது மூடப்படும்? அவற்றைத் தொடர்ந்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணை ஆகியவற்றை கொண்ட செயல்திட்ட அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story