கோவையில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் பணியிடை நீக்கம்
லஞ்ச வழக்கில் கைதான பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் சின்னராஜ் (வயது 61). பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த ஏலத்தில் பங்கேற்க சின்னராஜ் முடிவு செய்தார். இதையடுத்து அவர் ரூ.5 லட்சத்திற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
அவரது விண்ணப்பித்தினை பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ரூ.15 லட்சம் வரை சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கலாம் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் கோவை வடக்கு தாசில்தார் கோகிலா மணியை அணுகி சான்றிதழ் வழங்கும்படி கேட்டார். அப்போது சின்னராஜிடம் தாசில்தார் ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவதாக சொன்னதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத சின்னராஜ் இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, சின்னராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் நேற்று முன்தினம் தாசில்தார் கோகிலா மணியை சந்தித்து ரூ.25 ஆயிரம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கோகிலா மணியை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். லஞ்ச வழக்கில் கைதான பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story