பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்தாலும் சிறுபான்மையினர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது: மல்லை சத்யா


பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்தாலும் சிறுபான்மையினர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது: மல்லை சத்யா
x
தினத்தந்தி 6 Feb 2022 3:45 AM IST (Updated: 6 Feb 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்தாலும் சிறுபான்மையினர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.

ஹலோ எப்.எம். வானொலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசுகையில், ‘இந்த தேர்தலில் பலமுனை போட்டியெல்லாம் கிடையாது என்றும், தமிழகத்தை பொறுத்தவரையில் பல்லாண்டு காலமாகவே தி.மு.க.-, அ.தி.மு.க. இடையிலான இருமுனை போட்டிதான் என்றும், அதில் நிச்சயம் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளை தி.மு.க. மதிக்கவில்லை என்ற விமர்சனங்கள் தவறானது என்றும், எங்களை பொறுத்தவரையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் கேட்டதில் 90 சதவீதம் வரை நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். ஆளும் கட்சி அதிக இடங்களில் போட்டியிடுவதும் ஒரு சில குறைபாடுகள் இருந்தது இயல்புதான் என்றும் தாங்கள் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவதாகவும், தங்கள் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. எங்களை வற்புறுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவு குறித்து பேசுகையில், ‘இந்த விஷயத்தில் 2 கட்சி தலைவர்களுமே தேசிய அரசியலில் அதாவது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட கூட்டணி தொடரும் என்றுதான் சொல்லி இருப்பதால் இதன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது’ என்றும் கூறியுள்ளார். 4 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வின் தயவு இல்லாமல் தேர்தலில் ஜெயித்து காட்ட தயாரா என்றும் பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் கவர்னரின் செயல்பாடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், விளக்கமாகவும் மல்லை சத்யா பதில் அளித்துள்ளார்.


Next Story