``பதில் சொல்ல நினைத்து, புதுப் பிரச்னையை உருவாக்கிடகூடாது”- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்


``பதில் சொல்ல நினைத்து, புதுப் பிரச்னையை உருவாக்கிடகூடாது”- தொண்டர்களுக்கு  ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 7 Feb 2022 4:01 PM IST (Updated: 7 Feb 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை என திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பாடுபட்டு வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டிச் சாய்க்க துடிக்கிறது நீட் எனும் கொடுவாள். அதை ஏந்தியிருக்கும் எதேச்சதிகாரக் கரங்களை சட்டரீதியாக ஒடுக்கும் அகிம்சைப் போரை தொடங்கியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற இருக்கிற தீர்மானத்தின் நோக்கம், கடைக்கோடி தமிழக மாணவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்வதுதான். அதனை கருத்தில் வைத்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான காணொலி  பிரசாரத்தில் பங்கேற்க உள்ளேன். விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. 

உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.

மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். காற்றேற்றப்பட்ட பலூன், கண்ணுக்குத் தெரியாத குண்டூசி குத்தினாலே, உருத் தெரியாமல் சிதறிவிடும் அல்லவா! நீங்கள் உண்மைகளை மக்களிடம், உரிய வகையில் எடுத்துச் சொன்னாலே போதும். எதிரணியினர் நம்மை கோபப்படுத்துவார்கள்; ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது! அவர்கள் போல நாம், தரம் தாழ்ந்து, நிலை தடுமாறி, நடந்து கொள்ளவும் முடியாது. வெறும் கரண்டி பிடித்துள்ளவன், கையை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், எண்ணெய் கரண்டியை கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி சுழற்ற முடியாது; மீறிச் சுழற்றினால், எண்ணெய் கீழே கொட்டிவிடும். ஆட்சியில், வெகுமக்கள் வழங்கிய அதிகாரத்தில் நாம் இருப்பதால், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, கீழே இறங்கி தெருச்சண்டை போடவும் முடியாது; லாவணி பாடவும் முடியாது. இதை நீங்கள் எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள்; மதத்தை வைத்து இழிவு படுத்துவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகப் பேசுவார்கள். நமது குடும்பத்தை குறைத்துரைப்பார்கள். அதுதான் அவர்கள் பின்பற்றும் அரைகுறைப் பண்பாடு. ‘வாழ்க வசவாளர்கள்’ என்கிற நமது வழக்கமான அடிப்படையில்தான், நாம் நிச்சயம் செயல்படவேண்டும். இதுதான் நம் பண்பாடு, பார் போற்றும் நம் குணம்.

பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, புதுப் பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாது. எடுத்துரைப்பதற்கு நம்மிடம் ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. பெருமையோடுப் பேசுவதற்கு நம்மிடம் பீடுடைய வரலாறு இருக்கிறது. நாடும், ஏடும் போற்றும் நமது முன்னோடியான தலைவர்கள், அரிய ஆளுமைகள் - இலட்சிய வேட்கை மிக்கவர்கள் - அதற்காகப் பல வகையிலும் தியாகங்களைச் செய்தவர்கள். இதைத் தக்கபடி எடுத்துச் சொன்னாலே போதும். எக்காரணம் கொண்டும் தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.

தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படுவதும், படிக்கப்படுவதும், பகிரப்படுவதும் வாட்ஸ்அப் செய்திகள்தான். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் பார்வையிடும் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நமது செய்திகளைக் கச்சிதமாகப் பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டு சேர்ப்போம்” என்பதை தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலான காணொலிக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச்சதியினை முறியடித்து, நம் சாதனையைப் பரப்புவோம். சாதனைகளால் நிரம்பிய வாட்ஸ்அப் செய்திகள் நூறாக, ஆயிரமாக, இலட்சங்களாகப் பகிரப்படும்போது அது வெறும் வாட்ஸ்அப் செய்தியன்று. கழகத்திற்கு ஆதரவு பெருக்கிடும் வாக்குகளுக்கான அச்சாரம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு உடன்பிறப்பும், இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம் செலுத்துவதும்கூட, கொள்கைகளை நிறைவேற்றப் பயன்படும் பயணத்தின் ஒரு கட்டம்தான். அதில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில், அதைவிடவும் கூடுதல் கவனத்துடன் பாடுபட்டு வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சைப் போரினைத் தொடங்கியுள்ளோம். பிப்ரவரி 8-ஆம் நாள் கூட்டப்படும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்! அதனையும் கருத்தில் வைத்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான காணொலிப் பிரசாரத்தில் பங்கேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Next Story