“பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தவறில்லை” - சென்னை ஐகோர்ட் கருத்து


“பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தவறில்லை” - சென்னை ஐகோர்ட் கருத்து
x
தினத்தந்தி 9 Feb 2022 8:57 PM IST (Updated: 9 Feb 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசின் நடவடிக்கையில் தவறு இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெத்தேல் நகர் குடியிருப்பு வாசிகள் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர். 

அந்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கடந்த 2010 ஆம் ஆண்டு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றம் செய்திருப்பதாக அவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிராகரிக்கப்பட்ட பட்டாக்களை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, நிலத்தின் தன்மையை ஆராய்ந்து வகைமாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கு நில நிர்வாக ஆணையருக்கு தான் அதிகாரம் உள்ளது, மாவட்ட கலெக்டர் அதற்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள் வணிக கட்டிடங்களை முதலில் அகற்றுவதற்கும், மற்ற கட்டிடங்களை அகற்ற 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறும் அரசு, இத்தனை ஆண்டுகளாக அனுமதித்தது ஏன்? என்றும் அரசு தரப்பிற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Next Story