இந்தியாவின் கலாசாரத்தை பா.ஜ.க. சிதைக்கிறது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு


இந்தியாவின் கலாசாரத்தை பா.ஜ.க. சிதைக்கிறது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Feb 2022 3:45 AM IST (Updated: 10 Feb 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் கலாசாரத்தை பா.ஜ.க. சிதைக்கிறது என காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை அருகில் நடந்தது.

இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, மேடை பேச்சாளர் போன்று பேசியிருக்கிறார். இவ்வளவு பச்சையாக, கொச்சையாக பேச முடியுமா? என்ற அளவுக்கு அவருடைய பேச்சு அமைந்துள்ளது.

கலாசாரத்தை சிதைக்க...

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சோனியாகாந்தி, தங்களது கட்சியின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தார் என்பதை இந்த உலகம் அறியும். ஆனால் இன்று பிரதமராக இருக்கும் மோடி, அத்வானியை கண்டுகொள்வதில்லை. நீங்கள் உங்கள் தலைவருக்கு தரும் மரியாதை இதுதான். இதையெல்லாம் மறந்து காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தை பற்றி மோடி பேசுகிறார். அதற்கான அருகதை உங்களுக்கு இருக்கிறதா? என கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். இந்த தேசத்தின் கலாசாரத்தை சிதைப்பதற்காக பா.ஜனதா வந்திருக்கிறது.

நீட் தேர்வு விவகாரம்

நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக மக்களின் உணர்வு. இதில் அரசியல் இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 தினங்களுக்கு முன்பு பேசும்போது, பழமைவாதத்தில் உனக்கு படிப்பதற்கு தகுதி இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதனை மீண்டும் உருவாக்குவதற்காக நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றார். இது மு.க.ஸ்டாலின் கூறிய அருமையான கருத்து.

சட்டசபை தேர்தலை விட...

அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் எல்லா கிராமங்களிலும் ஆரம்ப பாடசாலை என்ற தத்துவத்தை உருவாக்கினார். இலவச மதிய உணவு கொண்டு வந்தார்.

சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை விட மிகப்பெரிய புரட்சியை பெருந்தலைவர் காமராஜர் செய்தார். எனவே சமூக நீதிக்கு நாங்கள் பொறுப்பாளிகளா? நீங்கள் பொறுப்பாளிகளா?. நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் வாக்களித்ததை விட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக உழைத்து அதிக வெற்றிகளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story