தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட முறைகேடான பொங்கல் தொகுப்பை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள்


தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட முறைகேடான பொங்கல் தொகுப்பை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள்
x
தினத்தந்தி 10 Feb 2022 3:49 AM IST (Updated: 10 Feb 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட முறைகேடான பொங்கல் தொகுப்பு குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்குமாறு வேட்பாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருவேற்காடு நகாரட்சிகள், திருமழிசை பேரூராட்சி மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட வளசரவாக்கம், அம்பத்தூர் மண்டலங்களை சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 158 வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. மேயர்

ஆவடி மாநகராட்சி அ.தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்ட மாநகராட்சி. எனவே, இந்த மாநகராட்சிக்கு முதன் முதலில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் மேயராக வருவதற்கு நமது வெற்றி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இந்த 9 மாத கால தி.மு.க. ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள்.

மக்கள் தயாராக இருக்கிறார்கள்

மக்களிடம் தற்போது அ.தி.மு.க.வுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த 9 மாத கால ஆட்சியில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த 9 மாத கால ஆட்சியில் அவர்கள் கொள்ளை அடிப்பதை மக்கள் விழிப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்துவது நாம் ஒவ்வொருவரின் கடமை.

போன ஆண்டு பொங்கலுக்கு அ.தி.மு.க. அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கியது. மேலும் தரமான பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், திராட்சை மற்றும் முழு கரும்பு உள்ளிட்டவற்றை பொங்கல் தொகுப்பாக வழங்கினோம். மக்கள் அதனை மனதார பாராட்டி மிகவும் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. 15 முதல் 18 பொருட்கள்தான் இருந்தது. பொங்கல் தொகுப்பு பொருட்களும் சரியான எடையில்லாமல் தரமற்ற பொருளாகவும் இருந்தது. பொங்கல் தொகுப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கான பையும் பலருக்கு வழங்கப்படவில்லை.

வீடு வீடாக சென்று...

பொங்கல் தொகுப்பை யாரும் மறக்க முடியாத அளவிற்கு கரைந்து ஒழுகிய வெல்லத்தை தி.மு.க. அரசாங்கம் வழங்கியது. மேலும், பச்சரிசி, கோதுமையில் புழுக்கள் நெழிந்தன. எனவே, அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்பு எப்படி கொடுத்தார்கள்? தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்பு எப்படி கொடுத்தார்கள்? என்பதை நமது வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இப்போது இல்லை என்று கூறி ஏமாற்றிவிட்டார்கள். மேலும், கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் ஏன் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆட்சியில் சம்பளம் குறைக்கப்படவில்லை என்று தற்போதைய நிதி அமைச்சர் சட்டசபையில் குறிப்பிடுகிறார்.

அ.தி.மு.க.தான் பாதுகாப்பானது

எனவே, அ.தி.மு.க. அரசுதான் அரசு ஊழியர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. மேலும், 7-வது ஊதியக்குழு உயர்வை கொண்டு வந்ததும் அ.தி.மு.க. அரசுதான்.

எனவே இவற்றை எல்லாம் அரசு ஊழியர்கள் எண்ணிப்பார்த்து வருங்காலத்தில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின், இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலையூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், தாம்பரம் மாநகராட்சிக்கான வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

Next Story