நகர்ப்புற உள்ளாட்சிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


நகர்ப்புற உள்ளாட்சிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 Feb 2022 5:55 AM IST (Updated: 10 Feb 2022 5:55 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாவட்ட கலெக்டர்களுடன் தோ்தல் ஆணையர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

12,825 பதவியிடங்களுக்கு நடைபெற இருந்த இந்த தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

களத்தில் 57,778 பேர்

இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவியிடங்களுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தீவிர பிரசாரம்

தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சர்கள் தலைமையில் மாவட்டம் தோறும் தி.மு.க.வினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பணிகள் தீவிரம்

அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேச்சைகளும் தங்களது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

அதேவேளையில் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் காணொலி மூலம் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

வாக்குச்சாவடிகள்

சுமார் 4 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. வாக்குச்சாவடிகளை தயார்படுத்துவது, வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது,

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை மேற்கொள்வது, பூத் சிலிப் வழங்குதல், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

வாக்குப்பதிவுக்கு 8 நாட்கள் மட்டுமே உள்ளதால் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டம் தோறும் அனுப்பப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அமர்த்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணியை பொறுத்தமட்டில் வருகிற 12-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதனை முறையாக மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பூத் சிலிப்

பூத் சிலிப் வழங்கும் பணியை விரைந்து தொடங்கவும், அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளுக்கே சென்று பூத் சிலிப் வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடி அருகே பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்யவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகிய விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் ஒட்டப்பட வேண்டும். இந்த நோட்டீசை அச்சிடும் பணியை விரைந்து மேற்கொள்ளவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உறுதி செய்ய வேண்டும்

தேர்தல் பிரசாரம் 17-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. 18-ந் தேதி காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுவதையும், அன்றைய தினம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவதையும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவை உள்ளிட்ட தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முறையாக மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

சென்னை

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இருப்போர் வாக்களிக்க 5,794 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் 1,061 வாக்குச்சாடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

இங்கு தோ்தலை சுமுகமாக நடத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை மேற்கொண்டார். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து உள்ளனர்.

Next Story