அ.தி.மு.க.-பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனமாக தி.மு.க. திகழ்கிறது - தஞ்சையில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


அ.தி.மு.க.-பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனமாக தி.மு.க. திகழ்கிறது - தஞ்சையில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 11 Feb 2022 5:43 AM IST (Updated: 11 Feb 2022 5:43 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக தி.மு.க. திகழ்ந்து வருகிறது என்று தஞ்சையில் தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லுக்குளம் மற்றும் கீழவாசல் பகுதியில் தி.மு.‌க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உங்களை எழுச்சியோடு பார்க்கும்போது நான் வாக்கு கேட்க வேண்டியது இல்லை. சட்டமன்றத் தேர்தலைப்போன்று உள்ளாட்சி தேர்தலிலும் நீங்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வந்து 8 மாதம் தான் ஆகிறது. அதற்குள் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. செய்த சாதனைகளை ஞாபகப்படுத்த நான் வந்துள்ளேன். கொரோனா நிவாரணமாக இரண்டு தவணையாக ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, இல்லம் தேடி கல்வித் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3-வது அலை வந்த போது ஆரம்பத்திலேயே துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவாக இதுவரை 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டது.

இந்திய அளவில் நடந்த சர்வேயில் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ராகுல் காந்தி பேசும்போது, தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்று கூறியுள்ளார்.

இப்படி அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக தி.மு.க. விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நகைக்கடன் குறித்து கேள்வி எழுப்பிய பெண்

உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது தஞ்சையை சேர்ந்த தங்கம்மா என்ற பெண் அவரிடம், எனக்கு இன்னும் நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், தங்கத்திற்கே நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லையா? என நகைச்சுவையாக கூற அங்கு கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். மேலும் நகை அடகு வைத்த ரசீதை எடுத்து வந்து இருக்கிறீர்களா? என கேட்டார். அதற்கு தங்கம்மா இல்லை என தெரிவித்தார். உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.விடம் மனுவை கொடுங்கள். அவர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.

Next Story