மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் வெட்டிக்கொலை

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் மர்மமான முறையில் கத்தியால் உடல் முழுவதும் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு துக்கம் அனுசரித்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மணிமாறன் என்கிற அசோக்குமார் (வயது 26). மீனவரான இவர் மாமல்லபுரத்தில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார். இரவு நேரங்களில் கடற்கரை மணலில் இவர் படுத்து தூங்குவது உண்டு. இதேபோல் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிந்தார். நேற்று காலை மீன்பிடிக்க சென்ற மீனவர், அசோக்குமார் கை, கால், தலை, வாய் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கடற்கரை மணலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் சிலர் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அசோக்குமார் உடல் அருகில் கொலை செய்து தப்பி ஓடிய நபர்கள் குறித்த தடயங்கள் ஏதாவது உள்ளதா? என தடயவியல் துறை நிபுணர்களை வரவழைத்து தடயவியல் கருவி மூலம் ஆய்வு செய்தனர். ஆனால் கொலை செய்துவிட்டு சென்ற நபர்கள் பற்றிய எந்தவித தடயமும் அங்கு போலீசாரின் பார்வையில் சிக்கவில்லை.
இதையடுத்து கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரங்களில் நடமாடிய சுற்றுலா பயணிகள், அங்குள்ள விடுதி, உணவகத்திற்கு வந்த நபர்கள் பற்றிய விவரங்களை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள உணவகங்களில் உள்ள சில கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் 2, 4 வாலிபர்கள் இரவு நேரத்தில் கடற்கரைக்கு வந்து செல்வதுபோன்று காட்சிகள் பதிவாகி இருந்தன. அதேபோல் கொலை நடந்த அன்று அங்குள்ள உணவகம், விடுதிகளில் யார்? யார்? வந்து தங்கினார்கள் என போலீசார் விசாரித்தனர்.
சுற்றுலா பயணிகள் போர்வையில் கடற்ரைக்கு வந்த கஞ்சா, மதுபோதை நபர்கள் யாராவது கடற்கரையில் அத்துமீறி நடந்தபோது, இவர் அதனை தட்டிகேட்டபோது இவரை படுகொலை செய்து தப்பி சென்றார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது இவரை கொலை செய்து விட்டு கடற்கரை மணலில் இவரது உடலை யாராவது வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசோக்குமார் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடம் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடற்கரைக்கு மது குடிக்க வருபவர்கள் கத்தி எடுத்து வருவது கிடையாது.
அப்படி போதையில் கைகலப்பு ஏற்பட்டதால் மதுபாட்டில்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்கள்தான் இங்கு அதிகம் நடந்துள்ளது, கத்தியால் கொலை நிகழ்ந்த சம்பவம் இப்போதுதான் முதல், முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் நடந்துள்ளது என்று அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அசோககுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளிகளை விரைவில் கைது செய்யக்கோரி மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, மீனவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துக்கம் அனுசரித்தனர். மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாததால் கடற்கரையில் படகுகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் வாங்க கடற்கரைக்கு வந்த அசைவ பிரியர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் காண முடிந்தது.
Related Tags :
Next Story






