2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
திருச்சி,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் த.மா.கா. வேட்பாளர்களின் அறிமுக பிரசார பொதுக்கூட்டம் நேற்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவாக தந்த அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. தற்போதைய தி.மு.க. அரசு தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் எதையும் அவர்கள் முறையாக நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சி வெறும் காட்சியாக இருக்கிறது. திட்டங்கள் எதுவும் மக்களின் கைக்கு வரவில்லை. மக்களின் எண்ணங்கள் பூர்த்தியாகவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தருவதாகச் சொன்னார்கள். உங்களுக்கு வந்ததா? இதனை முதல்-அமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டால், இன்னும் ஆட்சி 4 வருடம் இருக்கிறதல்லவா? தருவோம் என்கிறார்.
அதேவேளையில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்குதான் முதல் கையெழுத்து என்று சொன்னார்கள். மேலும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. அவர்களால் அது முடியாது. யாரை பார்க்க வேண்டுமோ அதைச்செய்யாமல், வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களின் பகல் வேஷம் கலைந்து இருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 வழங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இது போதாது. ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர்கள் பொங்கல் பரிசுத்தொகை 100 ரூபாயாவது கொடுத்தார்களா?. தரமில்லாத பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். இவற்றையெல்லாம் மக்கள் கண்கூடாகப் பார்த்து வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான தருணம். ஏற்கனவே, பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க.வின் முகமூடி கிழிந்து விட்டது. முழுமையாக முகமூடியை கிழிக்க இது நல்ல வாய்ப்பு. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறவேண்டும். வெற்றி உறுதி. இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலுடன் கண்டிப்பாக தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தால், வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மரண அடி விழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story